சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்புணர்வு உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சார்பில் தொடர்ந்த மனுவில், காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமெனவும், தேவைப்படும் போது விசாரணைக்கு வர வேண்டும் என நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி நடிகை மனு
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை இன்று (செப். 16) அளித்துள்ளார். அதில், “பாலியல் வழக்கான ராஜகோபாலன் வழக்கு, சிவசங்கர் பாபா வழக்கு என அனைத்து வழக்குகளிலும் காவல்துறையினர் உடனடியாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் எனது வழக்கில் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்லாமல் தேக்கம் ஏற்பட்டு இருப்பதாக நடிகை தெரிவித்துள்ளனர். இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வழக்கில் 90 நாள்களுக்குள் காவல்துறையினர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வரும் 18ஆம் தேதியுடன் இந்த வழக்கு தொடர்ந்து 90 நாள்கள் நிறைவடைய இருக்கும் நிலையில் நடிகை மனு அளித்துள்ளார்.
மாநில மெடிக்கல் கவுன்சிலுக்கு கடிதம்
இதே போல் தன்னை கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருண், மருத்துவர் மணிகண்டன் ஆகியோரின் மருத்துவர் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மற்றும் மாநில மெடிக்கல் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க : ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு - ஜாமீன் மறுப்பு