சென்னை: கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, திருவான்மியூரில் இருந்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனியார் பேருந்து மூலமாக பெங்களூருக்குச் சென்றுள்ளார். அப்போது அவரோடு பயணம் செய்த ஆண் பயணி ஒருவர், பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
பத்திரிகையாளர் கண்டித்தும் தொடர்ந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேருந்தில் நடத்துநரிடமும், உடன் பயணம் செய்த ஆண் பயணிகளிடமும் தெரிவித்தபோதும், யாரும் தனக்குப் பெரிதாக உதவ முன்வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்பொழுது பாதுகாப்பாக பயணிக்கலாம் என பெண்களிடம் பெரும்பாலும் நான் தெரிவிப்பது உண்டு. தனக்கு நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அது தவறு எனத் தெரியவந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை வீண் போனது:
தொடர்ந்து பயத்துடனேயே அந்தப்பேருந்தில் பயணித்து தனது அனுபவத்தை ட்விட்டரில் அப்பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அதில், 'குறைந்தபட்சம் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த ஆண் பயணியை மற்றவர்கள் கண்டித்து காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் அதுபோல் நடக்கவில்லை' என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுத்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாக கோயம்பேடு காவல் துறையினர் தொலைபேசி வழியாக பேசி நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேற்கு இணை ஆணையர் ராஜேஸ்வரி தொடர்பு கொண்டு தவறாக நடந்து கொண்ட ஆண் பயணிகள் மற்றும் பஸ் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் சென்னை காவல் துறையின் ட்விட்டர் கணக்கையும் இணைத்து புகார் அளிக்கும்போதே, சென்னை காவல் துறையினர் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறும், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்குமாறும் ட்விட்டர் மூலமாகவே பெண் பத்திரிகையாளருக்கு பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி - தம்பதி கைது