சென்னை : கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (39) இளங்கோவன் (37) ஆகிய இருவரும் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுவதோடு அதற்கு உதவியாக இருந்துள்ளனர்.
கிருஷ்ணவேணி, இளங்கோவன் இருவரும் இணைந்து புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நவாஸ் (32) மின்ட் ஸ்டாலின் (32) ஆகிய இருவரிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு சிறுமியை அவர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து சென்னை குற்றப்பிரிவு புலனாய்வு துறையின் கீழ் இயங்கிவரும் பாலியல் தொழில் குற்ற நிகழ்வு தடுப்பு பிரிவில் நான்கு பேர் மீதும் சிறுமியை கடத்தி அடைத்து வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், பாலியல் வன்கொடுமை செய்தல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்பு வழக்கு விசாரணை சென்னை போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
பின்பு, கிருஷ்ணவேணி, இளங்கோவன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் நவாஸ், ஸ்டாலின் ஆகியோருக்கும் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: குழந்தை பாலியல் வன்கொடுமை - 50 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை