சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது, பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்குத் தொடர்பாக புகார் அளித்த பெண் எஸ்.பி. உள்ளிட்ட அரசு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், புகாரளித்த பெண் எஸ்.பி. உள்ளிட்ட 4 சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதால் அவற்றை உறுதி செய்வதற்காக பெண் எஸ்.பி. உள்ளிட்டோரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் அருள் செல்வம், "ஏற்கனவே போதுமான அளவு குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் அனுமதிக்கக் கூடாது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என வாதாடினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெண் எஸ்.பி. உள்ளிட்ட மூவரிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதேசமயம், குறுக்கு விசாரணை செய்யப்படாத 62வது அரசு தரப்பு சாட்சியிடம் மட்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ''போதைப்பொருட்களே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்குக் காரணம்'' - பாமக தலைவர் அன்புமணி!