சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 27) நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், நமச்சிவாயபுரம் ரயில்வே பாலத்தின் அருகே, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெருங்களத்தூரை சேர்ந்த சுரேஷ் (எ) கண்ணன் (39), குரோம்பேட்டையை சேர்ந்த முகமது ஜான் (40), அரும்பாக்கத்தை சேர்ந்த இப்ராஹிம் பாட்ஷா (40) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுரேஷ் (எ) கண்ணன் மீது 1 கொலை மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 4 வழக்குகள். முகமது ஜான் மீது 2 கொலை வழக்குகள், 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
இதேபோல ஆயிரம் விளக்கு பகுதியில் கஞ்சா மற்றும் போதைபொருள்கள் பதுக்கி வைத்திருந்த அத்னன் அலிபேக் (31), முகமது ஷா மிர்கான் நைனா, தீபக் (எ) தீபக் குமார் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா, 630 போதை மாத்திரைகள், 11 இருமல் சிரப் பாட்டில்கள், நான்கு ஏர் கன் (Air Gun) மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல குரோம்பேட்டை சேர்ந்த முகமது முதாதீர் (26) என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா, 600 போதை மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சென்னை மக்களை அச்சுறுத்தும் அபாயகரமாக பைக் சாகசம்: ஆறு பேரை தூக்கிய போலீஸ்