சென்னை: கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின் போது அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சூரஜ் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது குழந்தையுடன் ஆஜரான அந்த பெண், திருமணமாகி கணவர் சூரஜ் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொண்டதாக பெண்ணின் தாயாரும் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, சூரஜ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பணியின்போது மறைந்த காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு பணி நியமனம்