மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், “சமீபத்தில் ஏற்பட்ட கரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 202 நாடுகளில் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் வருகைப்புரிந்த இரண்டு லட்சத்து 9 ஆயிரத்து 284 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 45 ஆயிரத்து 537 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 79 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மருத்துவமனையில் தனி வார்டில் 295 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை அவர்களில் 1,763 பயணிகளிடம் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அதில் 1,674 பயணிகளின் ரத்த மாதிரிகள் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.அவற்றில் 1632 பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை. 42 பேருக்கு நோய்தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது.
மீதமுள்ள 89 பேரின் ரத்தங்கள் பரிசோதனை ஆய்வில் உள்ளது. மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மாவட்டத்தில் 17 பேரும் சேலம், ஈரோடு மாவட்டத்தில் ஆறு பேரும் மதுரை மாவட்டத்தில் மூன்று பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் நான்காயிரத்து 523 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 780 பேர், திருச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 622 பேர், சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 424 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 348 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 168 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 170 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 110 பேர் என 43,537 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படிங்க: கரோனா: கம்பீர் ரூ. 1 கோடி நிதி