சென்னை: ஆர்.ஏ. புரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெரால்டு பெண்டோ. சின்னத்திரையில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் காவலாளி வேலைப்பார்த்து வந்துள்ளார். தாயும் தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தந்தையுடன் வசித்து வந்த ஜெரால்டு, அவர் இறந்த பிறகு தாய் ஜோஸ்மின் கமலா வீட்டில் வசித்துவந்துள்ளார். தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால், வீட்டை விட்டு வெளியேறுமாறு தாய் துரத்தியதால் வீடு இல்லாமல் ஜெரால்டு தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை வீட்டிற்குள் தாய் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவரது தாய் வீட்டிற்குள் அனுமதிக்காததால், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இடப்பிரச்னை தொடர்பாக இருக்கிற காரணத்தினால் நீதிமன்றத்தை நாடுமாறு காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காவலாளியாக வேலை பார்ப்பதால் வழக்கு நடத்த முடியாது எனக் கூறி தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
தாய் வீட்டிற்குள் சேர்க்காததால் மன விரக்தி ஏற்பட்டு இன்று(மே 20), சென்னை - காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெரால்டு மண்ணெண்ணெயினை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். உடனடியாக இதைக் கண்டதும் ஜெரால்டு தீப்பெட்டி எடுப்பதற்கு முன்பாக மீட்ட போலீசார், வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர் உயிரிழப்பு - இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் புகார்!