சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் மறுத்த நிலையில், துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த வழக்கு ஜூலை 7க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29ஆம் தேதி மாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அறிவுறுத்தலின் படி அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்த தமிழக ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவரது மனுவில், அரசியல் சாசனத்தின் படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும், நீதிமன்றம் தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Government Jobs: அரசுப் பணியிடங்களில் இனி முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு