தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூன்று பேர் செந்தில் பாலாஜி மீது புகார்
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண் குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விலக்கு பெற்றுள்ளார்.
இன்று நடந்த விசாரணை; ஆப்சென்ட் ஆன அமைச்சர்
இந்நிலையில் மீதமுள்ள இரு வழக்குகளும், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. அமைச்சர் என்பதாலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட துறை சார்ந்த கூட்டம் இருப்பதாலும் இன்று ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை தர முடியாது
அமைச்சர் என்பதால், சிறப்பு சலுகை வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து, அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் விசாரணை