சென்னை: செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைகழகத்தில் பி.டெக் 3ஆம் ஆண்டு படித்து வருபவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா விகாஸ் (20). இவர் குமரன் நகர் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி வருகிறார். இவரை கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் 10 பேர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சூர்யா விகாஸை வலுகட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அவரது நண்பர் தனுஷ் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தனது நண்பரை சிலர் பணம் கேட்டு கடத்திச் சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் தாழம்பூர் காவல் துறையினர் உடனடியாக விசாரணை செய்தனர்.
அதில், இளைஞருடன் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களான 4ஆம் ஆண்டு படிக்கும் மணி, சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் 10 பேருடன் அழைத்துச் சென்று தாழம்பூர் இணைப்பு சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சூர்யா விகாஸை மீட்டு, மாணவனை அழைத்து வந்த கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக புகார் ஏதும் கொடுப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, மாணவர்களிடம் விசாரிப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிறுநீர் கலந்த உணவு - காதலை நம்பி கொல்கத்தா சென்ற ஈரோடு பெண்ணுக்கு கொடுமை!