சென்னை: அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தேசிய சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தி இந்து குழுமத்தின் இயக்குனரும், மூத்த பத்திரிக்கையாளருமான என்.ராம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “செங்கோல் என்பது ஒரு பெருமையான விஷயம் இல்லை. மன்னர் ஆட்சி நீக்கி மக்கள் ஆட்சி வந்த உடன் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் மோடி மீண்டும் மன்னர் ஆட்சி கொண்டு வருவதற்கு இந்த செங்கோல் எடுத்து வருகிறார். அது சோழ, சேர, பாண்டியர் தாயாரித்த செங்கோல் இல்லை அது உம்மீடி பங்காரு செட்டியார் செய்தது.
இந்த செயலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இந்த பாராளுமன்ற திறப்பு விழாவின் போது ஆன்மிகம் அடிப்படையில் என்றால் சங்கராச்சாரியார் வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. தமிழக ஆதினம் மட்டும் அழைத்தது ஏன்? அதுமட்டுமின்றி கிருத்துவம், முஸ்லிம் என்று அனைத்து குரு மார்களை அழைத்து இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
தொடந்து பேசிய என்.ராம், “செங்கோல் பற்றி பல கட்டு கதைகள் தற்போது அரசியலில் வந்து உள்ளது. தற்போது நடிகர்கள் வைத்து நடித்து இந்த கட்டு கதையை அரசு இனையதளதில் வெளியிட்டு உள்ளனர். நேரு பிரதமராக பதவி ஏற்பதற்கு ஏதேனும் விழா நடத்த வேண்டுமா என மவுண்ட் பேட்டன் பிரபு கேட்டதாக சொல்வதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. இவர்கள் சொல்வது கட்டுக்கதை.
டெல்லியில் மவுண்ட் பேட்டன் பிரபுவை சந்தித்ததாக சொல்வதும் பொய். அந்த கால கட்டத்தில் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுத்ததாக சொல்வது கட்டுக்கதை. இவர்கள் தான் அதிகார மாற்றத்திற்காக கொடுக்கப்பட்டதாக சொல்லிக் கொள்கின்றனர்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி நேருவை சந்திப்பதற்கு முன்பாக மவுண்ட் பேட்டன் ஆதினங்களை சந்திக்க வாய்ப்பில்லை. செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து அதை அவர் நேருவிடம் கொடுக்க சொன்னதாக சொல்வது அனைத்து கட்டுக்கதை. ராஜாஜிக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நடக்காத நிகழ்வை நடந்ததாக சொல்வதற்கு இந்துத்துவாதான் காரணம்.
பிரதமராக பதவி ஏற்பு என்பது முக்கிய நிகழ்வு அன்று பல பரிசுகள் நேருவின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒன்றுதான் செங்கோல் அதனால் தான் அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அங்கு கோல்டன் ஸ்டிக் என்றுதான் உள்ளது வாக்கிங் ஸ்டிக் என்று இல்லை. அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுக்கப்பட்டது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை" என தெரிவித்தார்.