தமிழ்த் திரையுலகுக்கு காலத்தால் அழியாத பல வெற்றிப்படங்களை அளித்தவர், இயக்குநர் செல்வராகவன்.
தனது வித்தியாசமான கதைக்களத்தால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்டப் படங்கள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் - 2 குறித்த இவரது ட்விட்டர் பதிவு கூட இணையத்தில் பெரும் பேசு பொருளாகியது.
சர்ச்சையைக் கிளப்பிய 'திரௌபதி'
இந்நிலையில் நேற்று (டிச.4) செல்வராகவன் நாயகனாக நடிக்கவிருப்பதாக அறிவிப்பொன்று வெளியாகியது.
இந்த அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர்ப்புக்கான காரணமென்ன என்பது குறித்து கீழே காண்போம்.
மோகன்.ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் 'திரெளபதி'. அப்போது இத்திரைப்படமானது சாதிய ரீதியிலான கொள்கைகளை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
மேலும் இந்தப் படம் குறிப்பிட்ட ஒரு சாதிப் பிரிவினரின் புகழ் பாடும் வகையில் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.
திரௌபதி விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து மோகன்.ஜியின் இயக்கத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம்' திரைப்படமும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
மோகன். ஜி ட்விட்டர் பதிவு
இந்நிலையில் நேற்று (டிச.4) இயக்குநர் மோகன். ஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் செல்வராகவனுடன் இணைவது குறித்த பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், 'எனது அடுத்த திரைப்படத்தின் லீடிங் கதாபாத்திரத்தில் செல்வராகவன் சார் நடிக்கவிருப்பதை நினைத்து பெருமிதமாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். தலைப்பு மற்றும் இதர விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி!' எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராகவனின் ரசிகர்கள், சாதி ஆதரிப்பு மனப்பான்மையுடன் கதைக்களத்தை உருவாக்கும் ஒருவரின் திரைப்படத்தில் அவர் நடிக்கவிருப்பதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
அதிலும் ஒரு ரசிகர், 'உன்னை எல்லாம் அங்க வெச்சுருந்தேன் டாப்ல, உன் ரேஞ்சு என்னன்னு தெரிஞ்சுக்க செல்வா சார்...' என 7ஜி ரெயின்போ காலனி திரைப்பட வசனக்காட்சி பாணியிலேயே பதிவிட்டுள்ளார்.
தற்போது செல்வராகவனின் ரசிகர்கள் பலரும், அவரது திரைப்பட வசனக்காட்சியின் பாணியிலேயே புலம்பித் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா காலமானார்