சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானத்தில் வந்த கொரியர் பார்சல்களை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஜெர்மன், நெதர்லாந்து நாடுகளிலிருந்து வந்திருந்த நான்கு பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பார்சல்களில் மருந்து பொருள்கள் இருப்பதாகவும், தாமதமில்லாமல் டெலிவரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, புதுச்சேரி முகவரியில் இருந்த ஒரு பார்சலையும், சேலம் முகவரியில் இருந்த மற்றொரு பார்சலையும் சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்து பார்த்தனர். அதில் கலர் கலராக போதை மாத்திரைகள், போதை பவுடர்கள் இருந்தன.
மேலும் அந்த மாத்திரைகள் மண்டை ஓடு, பழங்கால விலங்குகள் வடிவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 278 போதை மாத்திரைகள், 7 கிராம் போதை பவுடர்கள் என ரூ. 9 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இளைஞர், புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சேலம் முகவரியில் உள்ள நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறப்பு விமானம் மூலம் தங்கக்கடத்தலில் ஈடுபட்டவர் கைது!