தமிழ்நாட்டில் மக்களவைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 40 தொகுதிகளிலும் தனிச்சையாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினர் பொதுமக்கள், வியாபாரிகள் பணத்தைதான் எடுக்கின்றனர். வாக்குக்கு தரும் பணத்தை தடுக்க முடிகிறதா?
ரூபாய் 50 கோடியிலிருந்து 100 கோடி வரை செலவு செய்கிறார்கள். பணத்தை எங்கு பதுக்கி வைக்கிறார்கள் என்பது அதிகாரிகளுக்கு தெரியும். அதை பிடிக்காமல் மக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது.
அதிமுக - பாஜக கூட்டணி இருவேறு கொள்கைகளைக் கொண்ட முரண்பட்ட கூட்டணி. கச்சத்தீவை மீட்போம் எனக்கூற திமுகவும், காங்கிரசும் மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கேட்டால் தேசிய கட்சிகள் எதுவும் செய்யாது.
நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். அதை ரத்து செய்ய மாட்டார்கள். அதிமுக சொல்வதை நம்புவதா, பியூஸ் கோயல் சொல்வதை நம்புவதா என்று குழப்பமாக உள்ளது. நீட் தேர்வை எழுதி வந்தாலும் பழைய பாடத் திட்டங்களைதான் படிக்கிறோம். பின்னர் எப்படி தகுதி உயரும். எந்த மாநிலமும் நீட் தேர்வை விரும்பவில்லை என்றால் நீக்க வேண்டியது தானே. மருத்துவ தரம் சரியில்லை என்றால் ஏற்கனவே மருத்துவ பட்டங்களை ரத்து செய்துவிட்டு நீட் தேர்வு எழுதி வர சொல்வீர்களா?
நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகள் வளர்வது மற்றவருக்கு பிடிக்கவில்லை. எனக்கும் ஆந்திராவில் உள்ள பவன் கல்யாணுக்கும் இது போன்ற வேலைகள் நடக்கிறது. வாக்குப்பதிவில் சின்னம் தெரியவில்லை. இதனால், ஆந்திராவில் கோபப்பட்டு அடித்து நொறுக்கினார்கள். ஆனால் நான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் நீதிமன்றம் சென்று கேட்டேன். நீதிமன்றமும் கைவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னத்தை சின்னதாக மங்கலாக யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கின்றனர். யாருக்கு சின்னம் தெரியவில்லையோ அதுதான் எங்கள் சின்னம்" எனப் பேசினார்.