வரும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இன்று தனது மனைவி, குழந்தை, கட்சித் தொண்டர்கள் புடை சூழ ஆரவாரத்துடன் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு பேரணியாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கமல் ஹாசன் பரப்புரைக்காக தனி விமானத்தில் செல்வதும், ஹெலிகாப்டரில் செல்வதும் அவரின் வசதியைப் பொறுத்தது. பிக்பாசில் அவர் சம்பாதித்ததே தனி விமானத்தை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கும். அதிகார பலம், பணப் பலம் கொண்ட திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே இம்முறை களம் காண்கிறோம். நிச்சயம் இதில் வெற்றியும் பெறுவோம்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசம் என்பது அறிவை வளர்க்கும் கல்வியிலும், உயிரை காக்கும் மருத்துவத்திலும், குடிநீரிலும், விவசாயிக்கு வழங்கப்படும் மின்சாரத்திலும் மட்டுமே இருக்கும். அதானி துறைமுகத்தை அடியோடு தகர்க்கவே இங்கு போட்டியிடுகிறேன்.
என் தாய் நிலத்தை என்னால் இழக்க முடியாது. என் மக்களிடம் ஓட்டு வாங்குவதை விட நாட்டைக் காப்பாற்றுவதே என் முதல்கடமை. அதனால் தான் இங்கு நின்று சண்டை செய்ய வந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். இவருக்கு எதிராக இந்த தொகுதியில் அதிமுக சார்பில் குப்பன், திமுக சார்பில் கேபிபி சங்கர் போட்டியிடுகின்றனர்.