சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேஷ் - சுரேகா ஆகியோரது திருமண விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்களுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது திருமண மேடையில் பேசிய சீமான் கூறுகையில், "சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒரே ஆயுதம் சாதி மறுப்பு திருமணங்கள் தான். இந்த சனாதனத்தில் உள்ள பிறப்பில் வேறுபாடு, ஏற்றத்தாழ்வுகள் கோட்பாடு ஆகியவற்றைத் தகர்த்து எறிகிற மிகப்பெரிய கருவிகள் தான் சாதி மறுப்பு திருமணங்கள், குருதி கலப்பு முதலியனவாகும்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், விஸ்வகர்மா கல்வித் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அவர், "நம் முன்னோர்கள், தலைவர்கள் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் நாயாகவோ, பேயாகவோ பிறந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த ஜென்மத்தில் படித்து மனிதனாகுங்கள் என்று கூறுகிறார்கள். இது தான் நமக்கு நடைபெற்ற புரட்சிகர மாறுதல்.
குலக்கல்வி என்றால் கொந்தளிப்பார்கள் என்று வாயில் நுழையாத பெயரை விஸ்வகர்மா என்று வைத்துள்ளனர். அதே குலக்கல்வி திட்டத்தை வேறு வடிவில் கொண்டு வருவதால் நாங்கள் எதிர்க்கிறோம். அதை ஏற்கவே முடியாது. இந்தத் தொழிலை இவர் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது.
இதையெல்லாம் ஏற்க முடியாது என்பது தான் இப்போது நடக்கிற சண்டை. இது ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதனால் இந்த விவாதத்தை நான் ரசிக்கிறேன், வரவேற்கிறேன், வா மோதி பார்ப்போம் என்றுதான் சொல்கிறேன். மணி அடிப்பதற்குக் கஷ்டப்படுகிறார்கள் என்று அதற்கு மாற்றுவழியாக ஒரு எந்திரத்தை வாங்கி வந்து மாட்டி விட்டீர்கள். ஆனால், மலம் அள்ளுவதைப் பார்த்த பிறகும் யாரும் அதற்கான மாற்றுவழியை யோசிக்கவில்லையே அது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து நடிகை வீரலட்சுமி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், "வீரலட்சுமி நீதிமன்றத்தில் வந்து சவால் விடட்டும். சவால் விடுவதற்கு என்று ஒரு தகுதி உள்ளது. எனது கோட்பாடு என்னவென்றால் என்னை எதிர்ப்பவன் எல்லாம் எனக்கு எதிரி அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் எனக்கு எதிரி" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூரிய ஒளிக்கதிரை குவித்து பெரியார் படத்தை வரைந்து அசத்திய நபர்!