சென்னை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட கட்டமைப்பை வலிமைப்படுத்துதல் மூன்றாம் கட்ட பயணத்திட்டமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ''இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு விலைவாசி மேலும் உயரும். விளைபொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் துறையில் அரசின் எந்த திட்டமும் இல்லை. உலகிற்கு வேளாண் எப்படி செய்ய வேண்டும் என கற்றுக் கொடுத்த இனம், வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வது கேவலம்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும் ஏனென்றால் நாமே விவசாயம் செய்வோம். அங்காடிகள் வைத்து ஒரே விலையில் நாங்களே விநியோகம் செய்வோம். மணிப்பூர் மாநில விவகாரம் விசாரணை சிபிசிஐடியும் மத்திய அரசிடம் தான் உள்ளது. விசாரணை எப்படி நடக்கும். மாற்றம் என்பதற்கு முன்னால் ஏமாற்றம் என்று போட்டுக்கொண்டு ஏமாத்துறோம் என மாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு, ''மணிப்பூரில் நடந்த கலவரத்தை அம்மாநில அரசு அங்கிருக்கும் காவல் துறையினரைக் கொண்டோ அல்லது ராணுவத்தினரைக் கொண்டோ கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், மணிப்பூரில் கலவரம் நடத்த வேண்டும் என மத்திய அரசு பாஜக விரும்புகிறது.
மணிப்பூர் கலவரத்தில் சாகிறவர்கள் காங்கிரஸ் வாக்காளர்கள், கலவரம் செய்பவர்கள் பாஜக வாக்காளர்கள், சாகட்டும் என பாஜக வேடிக்கை பார்க்கிறது. சொந்த நாட்டு மக்கள் சாகிறதை வேடிக்கை பார்க்கின்றனர். இதேபோல், கன்னியாகுமரியில் ஓகி புயலன்று நடுக்கடலில் தத்தளித்து நிற்கும்போது, எந்த கடற்படை வீரரும் சென்று காப்பாற்றவில்லை.
பின்னர், உயிரிழந்தவர்களின் சடலங்களை கொடுங்கள் என மக்கள் கேட்கும்போது, இந்த நாடு அவர்களை மதிக்கக்கூட இல்லை. ஏனென்றால், மீனவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்களது வாக்கு பாஜகவிற்கு இல்லை. அதனால் அது குறித்த ஒரு பொருட்டும் இல்லை. பாரத மாதாவிற்கு உருவமும், உயிரும் இல்லை. இருந்திருந்தால் அவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும். சட்டமும் அதிகாரமும் அவர்கள் கையில் இருப்பதால் செந்தில் பாலாஜியை சந்திக்க வேண்டியது தான்,செந்தில் பாலாஜிக்குச் சிறை போன்று இருக்காது... அப்படி பார்த்துக் கொள்வார்கள். எல்லா வசதியும் செய்து கொடுத்து அடைத்து இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வங்கி மோசடிகளுக்கு' காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!