சென்னை: அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறுகையில்,"மின் தடை அதிகரிப்பது போல மின்கட்டணமும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான எந்த வித திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. மின்சாரம் தயாரிக்க எவ்வளவோ வழிகள் உள்ளது. இன்னும் மின் தட்டுபாடு என கூறுகின்றனர்.
பொது கலந்தாய்வு குறித்த கேள்வி: ஏற்கனவே நீட் தேர்வினால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே ரேஷன், ஒரே கலந்தாய்வு, ஒரே கல்விக் கொள்கை என்பதையெல்லாம் ஏற்க முடியாது. சமமான வாழ்க்கை முறை இல்லாதபோது, சமமான கல்வி, ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம். மேலும், நமக்கென கலாச்சாரம், பண்பாடு வரலாறு உள்ளது. அதை படிக்க முடியாத கல்வி எதற்கு?
இந்த தேர்தலிலும் பிரதமர்தான் வெற்றி பெறுவார் என பேசும் கேள்விக்கு: தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை, இந்தியர் என்றாலே இந்தி பேசும் மாநிலங்கள்தான் என பெருந்தலைவரே நிராகரித்தார். தமிழர்களுக்கு பிரதமராகும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பின் தமிழர் ஓட்டை குறி வைத்து அமித்ஷா பேசி வருகிறார். கோவில்களை பூட்டிவிட்டு போவதுதான் சமூக நீதியா? உள்ளே சென்று வழிபடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறுவதற்கு ஒரு தலைவன் இல்லை.
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்வி: தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. அனைவரும் தனியார் பள்ளியை நோக்கி செல்கின்றனர். காரணம், கல்வி வியாபாரமாகி விட்டது. தமிழ்நாட்டில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். கேரளாவில் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் கூடியிருக்கிறது.
ஏனென்றால், அங்கு கல்வியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவசம் தேவை இல்லை. பள்ளியே இல்லாமல் இலவசம் எதற்கு? ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி கல்வியின் தரத்தை சமமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால், கல்வி மானுடனின் உரிமை, அது அரசின் கடமை.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி: அனைவருமே தமிழர்தான். ஆனால் தமிழரா இருப்பாரா, தமிழ் ஆட்சி மொழி ஆகுமா, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என மாறுமா, தமிழ் பயிற்று மொழியாக மாறுமா உள்ளிட்டவற்றைக் கொண்டு வர வேண்டும் செந்தில் பாலாஜி கூடதான் தமிழர் சாராயக் கடையை பிரமாதமாக நடத்துகிறார். தமிழ் இனத்தில் பிறந்தால் மட்டும் தமிழராக முடியாது. தமிழுக்காகவும், தமிழருக்காகவும் இறுதிவரை போராடுபவரே தமிழர்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு தள்ளிப் போவது குறித்த கேள்வி: ஆளுநருக்கு பட்டமளிப்பு விழாவெல்லாம் ஒரு விழாவா? ஆளுநருக்கு அதை விட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும். இதற்கெல்லாம் அவரை அழைக்கக் கூடாது.
திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு: ஆளுநருக்கு எதிராக பனகல் மாளிகை அருகே கத்தி விட்டுச் சென்று விடுவர். அது அவர் காதில் கூட விழாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து இரிடேட் செய்வதும், டென்ஷன் செய்வதும்தான் பாஜகவின் வேலை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடை விடுமுறை முடித்து பள்ளி சென்ற மாணவர்கள் வேதனை.. வேலூரில் நடந்தது என்ன?