தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் தேர்வு முடிவுகளை வைத்து மாணவர்களின் தேர்ச்சியை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அரசின் முடிவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள் இதற்கு எதிர்பபு தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 'பிஞ்சுகள், எதிர்கால தளிர்கள் மீது சுமத்தப்படும் கொடுமையான வன்முறையாக இதை பார்க்கிறேன். கல்வியை பற்றி முழுமையாக தெரியாத ஆட்சியாளர்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. கல்வியாளர்களிடம் இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும் அல்லது அவர்களது ஆலோசனைகளை பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த கல்விக் கொள்கையின் திட்டத்தில் பொதுத்தேர்வு இருக்கிறது. ஆனால், இதனை மற்ற மாநிலங்கள் அமல்படுத்த தயங்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு இவ்வளவு அவசரமாக பொதுத்தேர்வை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
பத்தாம் வகுப்பு மற்றும் +2 பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தோற்றுவிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அந்த மனஉறுதி இல்லாமல் தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில், எட்டு வயது நிறைந்த பிஞ்சுக் குழந்தைகளை பொதுத்தேர்வு எழுதச் சொல்வது எந்த விதத்தில் சாத்தியமாகும். பொதுத்தேர்வில் தோற்றுப்போகும் குழந்தையை சக தோழிகள், உறவினர்கள் எப்படி எற்றுக்கொள்வார்கள்.
பொதுத்தேர்வில் தோற்கும் மாணவ மாணவிகள், தீக்குளித்தும், தற்கொலை செய்துக்கொண்டும் இறந்து போகின்றனர். தேர்வினால் ஒரு சிறந்த மாணவனை தேர்ந்தெடுத்துவிட முடியும் என்பது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கும் முடிவு. வடிகட்டியால் தேனீர் எப்படி சுவையாகும். அப்படிப்பட்ட முறைதான் இந்தத் தேர்வு முறை. கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும் சுமையாக இருக்கக் கூடாது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது எவ்வளவு பெரிய அறிவுகெட்டத்தனம்.
5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வு எழுதச் சொல்லும் கல்வி அமைச்சர்கள் இருவரும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றால் பிள்ளைகளை தேர்வு எழுதச் சொல்வோம். பார்த்துப் படிக்கும்பொழுதே லாஸ் ஏஞ்செல்ஸுனு சொல்லத் தெரியவில்லை, சான் பிரான்சிஸ்கோனு சொல்லத் தெரியலை. இது கேவலமாக தெரியவில்லையா' (முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசினார் ) என்று மிகக் கடுமையாக தாக்கி பேசினார்.