கரோனா தொற்று காரணமாக சென்னை நரம்பியல் நிபுணரும், 30 ஆண்டுகளாக மக்களுக்குச் சேவை செய்துவந்த மருத்துவருமான சைமன் ஹெர்குலஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது அப்பகுதியில் உள்ள சமூகவிரோதிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்கள் இறந்தால் அவர்களை இடுகாட்டில் நல்லடக்கம் செய்வதற்குக்கூட பொதுமக்கள் மறுத்து தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல்.
அத்தியாவசிய பொருள்களை வாங்க வரும் பொதுமக்களையும், சிறு வியாபாரிகளையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்வோம் என மிரட்டும் காவல் துறையினர் மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்யவிடாமல் தடுத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது தீவினையானது.
ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லடக்கம் என்பது மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமை. எனவே தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: கல்லறையில் மரித்த மனிதம்... கரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடலைப் புதைக்க மக்கள் எதிர்ப்பு!