காய்கறி வாங்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால் பள்ளி, கல்லூரி மைதானங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சமுதாய நலக் கூடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், மற்ற மாநிலங்களில் கடைப்பிடிப்பது போல் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு நிறத்தில் அனுமதிச் சீட்டுகளை வழங்கி, அந்த நாட்களில் மக்கள் பொருட்கள் வாங்க அனுமதிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது.
அப்போது, பொருட்கள் வாங்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க, பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வியாபாரம் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
அரசுத் தரப்பின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.