மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி தாம்பரத்தைச் சேர்ந்த யேசுமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. அதேவேளையில் கடந்த 19ஆம் தேதி அதிரடியாக மறைமுகத் தேர்தல் நடப்பதற்கான அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது அரசியல் சட்ட விரோதமாகும்.
அரசின் இந்த புதிய நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, எனவே அந்த சட்டத்தை அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது” என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.