நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் ஏற்படும் இழப்பிற்கு ஈடுசெய்யும்விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், கரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான கிருமிநாசினி மற்றும் சோப் ஆகியவற்றை நேரடியாக வீடுகளுக்கு மாநில அரசு அளிக்கவேண்டும் எனவும் வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவினை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் முறையிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டதையடுத்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
மேலும், இந்த மனுவினை வழக்கமான முறைப்படி பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'கரோனா பாதிப்பு இருக்கும் வரை ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும்'