தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை (மே 2) எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இங்குக் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அனைவரும் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இந்த ஆவணம் காட்டும் நபர்களுக்கு மட்டும் அனுமதி அட்டை வழங்கப்படவுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படும் முன், வெப்ப பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். அப்போது, காய்ச்சல் கண்டறியப்பட்டால் உள்ளே அனுமதி கிடையாது.
வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள், டிபன் பாக்ஸ், வேதிப்பொருள்கள், திண்பண்டம், தீக்குச்சிகள் கொண்டுவரக்கூடாது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பாஸ் வைத்திருப்பவர்கள் தவிர வேறு யாரும் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிராமசபை ரத்து- தமிழ்நாடு அரசு உத்தரவு