சென்னை: புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி உள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கூடுதலாக 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 70 பேர் இன்று இரவு சென்னை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
மேலும், ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முழு சோதனைக்குப் பின்னரே பயணிகளின் உடைமைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரத்யேக சோதனை கருவிகள் மூலம் பயணிகளின் உடைமைகள் முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!