சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சிஎன்ஜி ஆகியவற்றின் விலை உயர்வு, தனியார் மயமாக்குதலை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனிடையே, தொழிற்சங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். சென்னையில் 3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் நேற்று 350 மட்டுமே இயங்கியது. இதனால் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேநிலை தான் நீடித்தது.
பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தொழிற்சங்க பொருளாளர் நடராஜர் , "மத்திய தொழிற்சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.
மக்கள், மாணவர்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கூறியதின் அடிப்படையில் இன்று(மார்ச் 29) பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது, பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே முன்னணி தொழிலாளர்கள் மட்டும் இன்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள், மற்ற தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்குவார்கள். 60% பேருந்துகள் வரை இயங்கும்" என தெரிவித்தார்.