சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நேற்று (அக்.12) அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தற்போது இந்த சோதனையானது இரண்டாவது நாளாக இன்று (அக்.13) நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் மார்ட்டின் வீடு மற்றும் அவரின் கார்ப்பரேட் அலுவலகம், அதேபோல் அவருக்குச் சொந்தமான ஹோமியோபதி கல்லூரி அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மேலும், மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனனின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மார்ட்டின் உறவினரான சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனி முகமது என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மே மாதம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கு ஒன்றை பதிவு செய்து, மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தற்போது, அதன் தொடர்ச்சியாக சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றிய பின்பு சந்தேகம் இருந்தால், சம்மன் அனுப்பப்பட்டு மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்களை விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் சிவசங்கர் மீது சவுக்கு சங்கர் ஊழல் புகார்!