சென்னை: இந்தியாவின் 77வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடினர். தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தலைநகரிலும், அம்மாநிலத்தின் முதல்வர்கள் கொடியை ஏற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி இருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கூட கோபுரத்தின் மேல் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேலும், இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தைப் பலரும் கொண்டாடி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தன் குழுவுடன் சென்னை மற்றும் ராமேஸ்வரத்தில் 30 அடி கடல் ஆழத்தில் தேசியக் கொடி ஏற்றினார். பின்பு, நெகிழி இல்லா கடலை உருவாக்கக் கடலிலிருந்து 50 கிலோ நெகிழிகளை அப்புறுப்படுத்திள்ளார்.
இது குறித்து ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்தன் இடம் கேட்டபோது, "புதுச்சேரி மற்றும் சென்னையில் டெம்பிள் அட்வேண்சர்ஸ் என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி நான் நடத்தி வருகிறேன், இங்கு இந்தியர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், தன்னார்வலர்களுக்கும் இங்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இங்கு, நான் 17 ஆண்டுகளாக ஆழ்கடலில், கொடியேற்றி வருகிறேன். நான் சுதந்திர தினத்திற்கு மட்டும் இது போல் செய்வதில்லை. உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்ற தினங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தப் பல நிகழ்வுகளைக் கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளேன்.
கடந்த 17 ஆண்டுகளாகக் கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் சைக்கிள் தினம், சுதந்திர தினம், மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வை ஆழ்கடலில் செய்து வருகிறேன். இம்முறை நான் சென்னை நீலாங்கரையில் மட்டும் இதைச் செய்தேன்.
இன்று (ஆகஸ்ட் 15) மதியம், என் மாணவர்களான, நிஷ்விக், தாரகை ஆராதனா, சிந்துஜா, மோகன் ஸ்ரீராம், அஷ்வின், லட்சுமணன் ஆகியோருடன் இதை ராமேஸ்வரம் பகுதியில் செய்தேன். மேலும் இதைத் தொடர்ந்து, நானும் என் மாணவர்களும், கடலுக்குள் இருந்தும், பவளப் பாறைகளின் இடுக்குகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி, நெகிழி இல்லா கடலை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Independence Day: தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா... தேசியக் கொடிகளை ஏந்தி அணிவகுத்த யானைகள்..!