சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது செயின்ட் ஜார்ஜ் பள்ளி. இங்கு படித்த மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்தப் புகார் மீதான விசாரணையை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
விசாரணை ஒத்திவைப்பு
ஆணையத்தின் முன்பாக செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு உடல் நிலை சரியில்லை எனக் காரணம் கூறி பள்ளி நிர்வாகிகள் இன்று (ஜூன்.7) நேரில் ஆஜராகவில்லை. மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர்,’பள்ளி நிர்வாகம் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகிகள், வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தனர்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
பள்ளியில் குற்றங்கள் நடந்ததற்கு என்னிடம் இருந்த ஏழு ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ’பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளீர்கள்’ என கூறியுள்ளது. அதற்காக அவரின் சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்யை பிடித்தம் செய்துள்ளது. இது குறித்து அவரின் பணிப்பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன்.
அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பின்னரும் அவருக்கு சம்பளம் அளித்து பணியில் வைத்திருக்கும் நிர்வாகத்தின் மீதும் புகார் அளித்துள்ளேன். குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். மேலும் ஆசிரியர் வரும் 15ஆம் தேதி வராவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளேன்.
பள்ளியின் தாளாளர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளேன். எனவே ஆணையம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும்’என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சரை அலுவலர்கள் தொந்தரவு செய்யக்கூடாது: வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்!