சென்னை: 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் முதல் அலை பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
அதன்பின் தொடர்ந்த இரண்டாம் அலையின் தீவிரத்தைத் தொடர்ந்து, பள்ளிகள் கடந்த கல்வியாண்டிலும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளிகள் மூடப்பட்டிருந்த நாட்களில், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. தொற்றின் தீவிரம் தற்போது குறைந்து வரும் சூழலில், செப்டம்பர் 1இல் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கையாண்டு, பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன.
புத்தாக்கப் பயிற்சி புத்தகம்
இந்த நிலையில் முறையான நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், பழைய பாடங்களை நினைவில் கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதல் 45 நாள்களுக்கான புத்தாக்கப் பயிற்சி புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்தும், பள்ளிகளில் நடந்துவரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், ராயப்பேட்டையில் உள்ள அரசு ஹோபர்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்மணி கூறும் போது, "பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 45 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு பாடத்தின் சுருக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அட்டவணை தயார் செய்யப்பட்டு, ஆசிரியைகள் மாணவிகளுக்குப் பாடங்களை கற்பிக்க உள்ளனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பள்ளியைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
பயம்போக்க ஏற்பாடுகள் தயார்
ராயப்பேட்டை கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் பேட்ரிக் சாம்," பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஒரு பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கும்பொழுது மற்றொரு பிரிவு மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்களை ஆன்லைனில் கற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
மாணவர்கள் பள்ளிக்குள் வருவதற்கு மூன்று நுழைவுவாயில்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்து வகுப்பறையிலும் கிருமிநாசினி வசதி செய்யப்பட்டுள்ளதுடன், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மாணவர்களுக்குப் பயத்தைப் போக்குவதற்கு, மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கும் மருத்துவர்கள் நியமனம் செய்துள்ளோம். பள்ளி வளாகத்தில் சிறிய மருத்துவமனையும் அமைத்துள்ளோம். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அச்சமின்றி பள்ளிக்கு அனுப்பலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்