தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அம்மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு கட்டாயம். இந்த தேர்வினை எழுதினால் மட்டுமே பள்ளியில் மூலம் தேர்வு எழுதாத மாணவர்களாக இருந்தாலும் பொதுத் தேர்வினை எழுத விரும்பினாலும் அனுமதிக்கப்படுவர்.
பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் விபரம் முழுவதும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் மாணவர்களின் விபரங்கள் பெறப்பட்டாலும் அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா? என்பதை அரசுத் தேர்வுத்துறை சரிபார்ப்பதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பிவைப்பார்கள். அதனை பள்ளிகள் சரிபார்த்து அரசுத் தேர்வுத்துறைக்கு எந்த விதமான தவறுகளும் மாணவர்களின் பெயர் பட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்து அளிக்கும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பாவர்.
அதேபோல் அரசுத் தேர்வுத்துறையின் சார்பில் நடைபெறும் பொதுத் தேர்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்தான் நடத்துவார்கள். அவர்கள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் பள்ளியை ஆய்வும் செய்து சரியாக உள்ளது என கூறுவார்கள். ஆனால் இந்தாண்டு அரசுத் தேர்வுத்துறை பலமுறைக் கேட்டும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பெயர் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பாமல் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கான முழு பெயர் பட்டியல் தயார் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர்களின் விபரங்களை அளிக்காத பள்ளிகளின் பட்டியலையும் தேர்வுத்துறை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை இதுவரை 150 பள்ளிகள் தரவில்லை. உடனடியாக மாணவர்களின் விபரங்களை அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து கல்வி அலுவலர் ஒருவர் கூறும்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது அதுபோன்ற பணிகளை சரியாக மேற்கொள்ளாமல் மாணவர்களின் தேர்வில் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பெயர் பட்டியலை அளிக்காமல் உள்ளனர். விரைவில் அளிக்காவிட்டால் பொதுத்தேர்வு எழுதுவதற்கு இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி வெளியானது!