சென்னை மண்ணடி ஆர்மீனியன் தெருவில் வசித்து வருபவர் சாகுல் ஹமீது( 38). இவர் தற்போது அந்த இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார். இங்கு பணிப்புரிந்துவரும் கட்டட தொழிலாளர்களுக்கு தேநீர் வழங்க, அதே பகுதியை சேர்ந்த ரியாஸ் (15) என்ற பள்ளி மாணவரிடம் ஆர்டர் கொடுத்துள்ளார்.
ரியாசுக்கு பள்ளி விடுமுறை என்பதால், கரோனா நேரத்தில் வீட்டில் பெற்றோர் வைத்துக் கொடுக்கும் தேநீரை அந்தப் பகுதியில் வழங்கிவரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் இன்று மதியம் வீட்டின் உரிமையாளர் சாகுல் ஹமீது, ரியாசிடம் கட்டட பணியாளர்களுக்கு தேநீர் வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதனால் ரியாஸ் தேநீரை எடுத்துக் கொண்டு கட்டடத்தின் 7ஆவது மாடிக்கு சென்று பணியாளர்களுக்கு வழங்கிவிட்டு, வேகமாக கீழே இறங்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரியாஸ், கட்டடத்தில் லிப்ட் கட்ட தயார் செய்த பள்ளத்தில் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகயமடைந்த ரியாஸை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ரியாஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ரியாஸின் தந்தை ஜாகீர் ஹூசைன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர் சாகுல் ஹமீது மீது அனுமதியின்றி கட்டடம் கட்டியுள்ளதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவிக்கும்படி நடந்த காரணத்தினாலும், 304(அ) சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள சாகுல் ஹமீதை தேடி வருகின்றனர்.