சென்னை: சம வேலைக்குச் சம ஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 28ஆம் தேதி முதல், பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் 2 முறையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் ஒரு முறையும் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து தங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, “சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து அரசு அமைத்துள்ள குழுவின் பரிந்துரை பெற வேண்டி உள்ளது. அதற்கு 3 மாத காலம் ஆகும். எனவே போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ள ஆசிரியர்கள் பயிற்சிக்குச் சென்று அதன் பின்னர் பணிக்குச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை (அக்.05) போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த இடைநிலை ஆசிரியர்களை, காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று கல்யாண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ராபர்ட், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், டிட்டோஜாக் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக, பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்யவும், அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றவும், அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவுசெய்து அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த ஆசிரியர்கள் மையங்களின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களை காவல்துறையினர் திருமண மண்டபங்களுக்குள் அனுமதிக்க மறுப்பதால், சாலையில் அமர்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "காவிரி நீரை பெற திராணி இல்லாத திமுக அரசு" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!