சென்னை: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது 17 வயது மகன் ஸ்ரீராம் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீராம் தனது பெற்றோரிடம் சரிவரப் பேசாமல் அதிக மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (டிசம்பர் 30) இரவு சுமார் 8.45 மணியளவில் ஸ்ரீராமின் பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்ரீராமின் படுக்கையறை உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது.
கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீராம் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, ஸ்ரீராமின் உடலை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குப் பெற்றோர் எடுத்துச் சென்றபோது ஸ்ரீராம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துறை விசாரணை
மேலும், மாணவன் ஸ்ரீராம் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக ஸ்ரீராம் தற்கொலை கடிதம் ஏதும் எழுதியுள்ளாரா? என்றும், மாணவனின் மன உளைச்சலுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் பெற்றோரிடமும், அவர் படித்துவந்த தனியார் பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டுவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்கதையான தற்கொலைகள்
அண்மைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சென்னையில் மன உளைச்சல் காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவி மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மருத்துவக்கல்லூரி மாணவி
சென்னை ஆவடி தென்றல் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் கீர்த்தனா (24) கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்துவருகின்றார்.
குடும்பப் பிரச்சினை, படிப்பு பிரச்சினை காரணமாக கீர்த்தனா சில நாள்களாக மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கீர்த்தனா நேற்று முன்தினம் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிரைக் காப்பாற்றிய உயிர்த் தோழி
மயக்க நிலையிலிருந்த கீர்த்தனாவை அவரது தோழி ஜான்ரோஸ் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்தச் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபடக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கீர்த்தனா மயக்கம் தெளிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தையொட்டி தீவிரப் பாதுகாப்புப் பணியில் போலீசார்!