வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 71- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு 1444 பயனாளிகளுக்கு, ரூ 11 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு வகையான வங்கிக் கடன் உதவி சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள் தொழில்நுட்பங்களை தமிழக அரசு அளித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் 'ஒரு லட்சத்து 51' உறுப்பினர்களுக்கு 1051 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது”.
”கூட்டுறவு துறையில் வாங்கப்பட்ட பல்வேறு வகையான கடன்களை 87 கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது. குறிப்பாக கூட்டுறவு நுகர்வோர் துறை மூலம் 20,500 பயனாளிகளுக்கு 40 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது”.
“மேலும் வரும் பொங்கலுக்கு நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளது எனவே கடை ஊழியர்கள் நியாயமாக செயல்பட வேண்டும். மேலும் இது தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கூறுகையில், “காட்பாடியில் திமுகவினர் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்து கொண்டுதான் வருகிறேன். போன முறை தேர்தலின் போது கொஞ்சம் ஏமார்ந்து விட்டேன். இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன். சிலர் துரோகங்கள் செய்துவிட்டார்கள். அதுவும் எனக்கு தெரியும்.
இதையும் படிங்க: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சமரச தீர்வு மையத்தை அணுக நீதிபதி அறிவுறுத்தல்!
அந்த துரோகிகளை கலை எடுத்துவிட்டு, தேர்தலை நடத்தும் ஆற்றல் எனக்கு உள்ளது. நான் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுவேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன். என்னையே கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்தை நான் 60 ஆண்டுகள் கட்டிகாத்து வருகிறேன். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன்” எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் அமைச்சரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதாக விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர், “எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன நடத்தாவிட்டால் எனக்கென்ன. அவருடைய ஆட்சி காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை ஒரே ஒரு ஏரிக்கு தான் அனுப்பினார்கள். ஆனால் எல்லாவற்றையும் தன்னுடைய ஆட்சி காலத்தில் செய்ததாக கூறுகிறார். ஆனால் திமுக ஆட்சியில் தான் எல்லா ஏரிகளுக்கும் தண்ணீர் அனுப்பியது” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.