கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பாண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19ஆம் தேதிமுதல் நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் இன்றுமுதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதித்தனர்.
மேலும், மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்தனர். பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர்கள் நீண்ட நாள்களுக்குப் பின்னர் தங்களின் நண்பர்களைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா கூறியதாவது, “சென்னை மாவட்டத்தில் 665 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் இன்று 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 19ஆம் தேதி 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாததால் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்!