மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சில பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஊட்டசத்துக்கான காய்கறிகள் உற்பத்தி செய்து சத்துணவில் சேர்த்து சமைக்கப்பட்டுவருகிறது. இதனை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதில், ”மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் திட்டங்களுக்கான அனுமதி அளிக்கும் கூட்டத்தில், பள்ளிகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து மாணவர்களுக்கு ஊட்டச்சத்தினை அளிப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளிகளில் தற்பொழுது அதிகளவில் காலியாக உள்ள இடங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும். கிராமங்கள், நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறித் தோட்டங்களை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள், முறையான பயிற்சி ஆகியவை அரசால் வழங்கப்படும். பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக்கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலத்தடி நீரைக் காக்க 30ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள்!