சென்னை: வட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்றும், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது இந்த மாவட்டங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும், புதிதாக நியமனம் பெறுபவர்கள் ஐந்து ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், "கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருக்கின்றன. எனவே புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது, இந்த மாவட்டங்களில் நியமனம் செய்ய வேண்டும்.
தேவைக்கும் அதிகமாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவையான பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொரு ஆண்டும் பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். இப்படி உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்த பிறகே, பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்த வேண்டும். புதிய ஆசிரியர்களுக்கான நியமன ஆணையில், 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவையும் சேர்க்க வேண்டும்" என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ரூ.70 லட்சம் பணம், நகை கொள்ளை! நகைக் கடை ஊழியரிடம் நூதனத் திருட்டு! எப்படி நடந்தது?