சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நீட் பயிற்சி குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்பட்டுவருகிறது. கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கான நீட் பயிற்சி நேரடியாக வழங்காமல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.
பெரும்பாலான மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன.
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு நடத்தினார்.
அப்போது பள்ளிக் கல்வித் துறையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய அன்பில் மகேஷ், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதலமைச்சர் அனுமதி அளித்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
நீட் பயிற்சி
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் எந்த நிலையில் நடைபெறுகின்றன என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க - பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்