சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 14 ஆயிரத்து 19 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தியும், அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கு 109 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
கரோனா தொற்று காரணத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கை நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டிலும் பெற்றோர்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்ததுடன் புதிதாகவும் அரசு பள்ளியில் மாணவர்களை ஆர்வமுடன் பெற்றோர்கள் சேர்த்தனர்.
இதனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்தது. தொடக்கக் கல்வித் துறையில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டன. தொடக்கக் கல்வித் துறையில் மட்டும் 4,969 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தது.
அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி பணி இடங்களில் 8,342 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தற்காலிக அடிப்படையில் மதிப்புரியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு பெற்ற தகுதி உள்ள ஆசிரியர்கள் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் கடந்த நான்கு மாதமாக வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக பன்னிரண்டாயிரமும், பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் 15 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் 18 ஆயிரம் என்று வழங்க அரசு உத்தரவிடப்படுகிறது. இவர்களுக்கு வழங்குவதற்காக 109 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை மாணவர்களின் நலனை கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் நிரப்பப்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் தவிர்த்து மீதி உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்