பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வு நடத்துவதற்கான பணிகளில் தேர்வுத்துறை இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையங்கள் அனைத்தும் தயாராக உள்ளனவா? என்பது குறித்தும், கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மையம் வருகிறதா? என்பது குறித்தும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மையம் இருந்தால் அருகிலுள்ள எந்த பள்ளியை தேர்வு மையமாக அறிவிக்கலாம் என அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மையங்களில் எத்தனை மையங்கள் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளன, என்பது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறையிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான பட்டியலைப் பெற்று அதன் மூலமும் தேர்வு மையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வீடியோ அழைப்பு மூலம் நாளை (மே 15) நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.