ஒன்பது மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இதனையொட்டி தமிழ்நாடு அரசு மாணவர்களை நோய்த்தொற்றிலிருந்துப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
அதன் ஒரு பகுதியாக தற்போது மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஒரு மாணவருக்கு 10 மல்டி விட்டமின் மாத்திரைகள் மற்றும் 10 ஜின்க் மாத்திரைகள் என 20 மாத்திரைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மாத்திரைகள் வழங்கப்பட இருக்கின்றன. வரும் 18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாத்திரைகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.