கரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று குறைந்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு வரும் நவ.16 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தீபாவளிப் பண்டிக்கைக்குப் பின்னர் கரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளை திறக்கக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.
அதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் நவ.9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கருத்துகள் கேட்கப்பட்டன. இதனை பள்ளிக்கல்வித்துறை அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் வரும் நவ.16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவை அரசு தள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மேலும், மழை மற்றும் பண்டிகை காலத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதால் நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்படும் காசு மாற்றினாலும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடந்து, பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. அதில் விடுதி அறைகளில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .
இவை நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் தற்போதைய நிலையில் கல்லூரிகளை திறப்பதற்கான வாய்ப்பில்லை என உயர் கல்வித்துறை தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பதை, தமிழ்நாடு அரசு ஒத்திவைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்