சென்னை விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துகொண்டிருந்தான். அப்போது ரோந்துப் பணியில் இருந்த விமான நிலைய காவல்துறையினர் சிறுவனிடம் விசாரித்தனர்.
அவன் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவன், விழுப்புரம் கூடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவரின் மகன் ஆரோக்கியம் என்பதும், விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் படித்துவந்த அவன், அங்கிருக்கப் பிடிக்காமல் சென்னைக்கு வந்ததும் தெரிய வந்தது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய சிறுவனிடமிருந்த ரூ. 800 பணத்தை யாரோ திருடிக்கொண்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் விமான நிலையத்தில் சுற்றியதாக தெரியவந்தது. பிறகு, சிறுவனுக்கு உணவு தந்த காவல்துறையினர் சென்னையில் உறவினர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று விசாரித்தனர்.
அப்போது சென்னை கொட்டிவாக்கத்தில் மாமா மரியதாஸ் இருப்பதாக சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து மரியதாசுக்கு தகவல் தந்து அவரை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். சிறுவன் ஆரோக்கியத்திற்கு அறிவுரை கூறி மரியதாசுடன் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: தூக்கில் தொங்கிய சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவன்: எஸ்பி பாராட்டு!