சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை, தி நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் இவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில் ”கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள Sakthi recreation centreஇல் இருந்து தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு ”நீங்கள் எங்கள் க்ளப்பில் மெம்பராக சேருங்கள், உங்களுக்கு பல சுற்றுலா சலுகைகள் அளிக்கப்படும்” என ஆசை வார்த்தை கூறி முதலில் ரூபாய் 5000 கட்டுமாறு கூறினர்.
முதலில் ஐந்தாயிரம் பிறகு 30 ஆயிரம்...
தொடர்ந்து அடுத்தநாள் நீங்கள் முப்பதாயிரம் ரூபாய் கட்டினால் உங்களை குடும்பத்துடன் இலவசமாக சுற்றுலா அனுப்புகிறோம் எனக் கூறி முப்பதாயிரம் ரூபாய் பணத்தை என்னை நேரடியாக வரவழைத்து கிரெடிட் கார்டு மூலம் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் சுற்றுலா செல்வது பற்றி எந்தத் தகவலும் சொல்லாமல் என்னை ஏமாற்றி வந்தனர். இதனை அறிந்த நான் என் பணத்தை திரும்பிக் கொடுக்குமாறு கிளப் நிர்வாகத்திடம் கேட்டேன். அவர்கள் பணத்தை தர வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும், அடுத்த நாளே மொத்த பணத்தையும் திரும்ப தந்து விடுவோம் எனவும் கூறி வலுக் கட்டாயமாக என் கிரெடிட் கார்டை வாங்கி ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டனர்.
பின்பு இதுநாள்வரை என் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றி வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக அவர்களை சந்திக்க முடியாமல் இருந்தது.
பணத்துக்கு பதிலாக மசாஜ்...
இதையடுத்து இரண்டு நாள்களுக்கு முன்பு நேரில் சென்று பணம் கேட்டேன். ஆனால் பணம் எல்லாம் தர முடியாது, வேண்டுமானால் எங்கள் சென்டரில் மசாஜ் உள்ளது. இங்கு உள்ள பெண்களிடம் வாரம் இரண்டு முறை வந்து மசாஜ் செய்து கொள்ளுங்கள் எனக் கூறி துரத்தி விட்டனர்.
என்னை சுற்றுலா அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை ஏமாற்றிய சக்தி கிரியேஷன்ஸ் மேலாளர் பாலகிருஷ்ணன், ரேகா, உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: லாரியுடன் நெல் மூட்டைகளை கடத்த முயற்சி... சிசி டிவி காட்சி மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள்!