குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து தான் ஆற்றிய பணிகள், உரைகள், மக்கள் சந்திப்பு, தூதரக பயணம் உள்ளிட்டவற்றை தொகுத்து 'லிசர்னிங் லேர்னிங் அண்ட் லீடிங்' (கேட்டல் கற்றல் வழிநடத்துதல்) என்ற நூலை வெங்கையா நாயுடு எழுதியுள்ளார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, "தமிழையும், தமிழ்நாட்டையும் நான் காதலிக்கிறேன். ஏன் என்றால் தமிழ்நாடு இந்தியத் திருநாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில், விவசாயிகள், போராளிகள் என அனைவரும் உள்ளனர். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் சலித்துவிட்டது; ஆனால், மக்கள் பணி சலிக்கவில்லை.
எந்தவொரு பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து நான் வந்துள்ளேன். தற்போது குடியரசுத் துணைத் தலைவராக வளர்ந்துள்ளேன்" என்றார்.
தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்த வெங்கையா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாண பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.
தொடக்கக் கல்விவரை மாணவர்கள் அவரவர் தாய்மொழி வழியில் பயில்வது கட்டாயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.