சென்னை: SBI form in Hindi: தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு அலைகள் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வசந்தகுமாரி என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் ஆர்.ஏ. புரம் கிளையின் வாடிக்கையாளராக உள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று (டிச.28) வங்கியை அணுகி தனது லாக்கரை திறப்பதற்கு விண்ணப்பப் படிவம் பெற்றுள்ளார். அப்போது அந்த படிவத்தில் இருந்த கேள்விகள் ஹிந்தி மொழியில் இருந்ததைக் கண்டு அதிருப்தியடைந்தார்.
அதில் மூன்று விவரங்கள்- லாக்கர் எண், விண்ணப்பதாரர் மற்றும் சரிபார்ப்பவரின் கையொப்பம் மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புதிய படிவம் என பதில்
பிறகு, வசந்தகுமாரி வங்கி அலுவலர்களை அணுகி ஏன் விண்ணப்பத்தில் உள்ள அனைத்துக் கேள்விகளும் மாநில மொழியில் (தமிழ்) அல்லது ஆங்கிலத்தில் இல்லாமல் ஹிந்தி மொழியில் உள்ளன எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அலுவலர்கள் இது புதிய படிவம் எனப் பதிலளித்துள்ளனர்.
இதனை அறிந்த வசந்தகுமாரியின் மகள் சுசித்ரா விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வை பதிவு செய்தார்.
அதில், "அம்மா சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளராக உள்ளார். அங்கு விண்ணப்பங்கள் ஹிந்தி மொழியில் உள்ளன.
மேலும் எனக்கு ஹிந்தி தெரியாத நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை எப்படி பூர்த்தி செய்வது என்று கேட்டுள்ளார். அதற்கு வங்கி அலுவலர்கள் இது புதிய படிவம் எனக் கூறியுள்ளனர்" என ட்வீட் செய்துள்ளார்.
தலைமை அலுவலகம் தான் முடிவெடுக்க வேண்டும்
இதையடுத்து வங்கியின் மேலாளர் வசந்தகுமாரியைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், வங்கி அலுவலர்கள் வசந்தகுமாரியை நேரில் சந்தித்துள்ளனர்.
இது தொடர்பாக வங்கி அலுவலர்கள் கூறுகையில், "இந்த பிரச்னையை பொறுத்தமட்டில் தலைமை அலுவலகம் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறினர்.
சு. வெங்கடேசன் ட்விட்டர் பதிவு
இந்தப் பிரச்சனை குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டரில், "பாரத ஸ்டேட் வங்கி, சென்னை ஆர்.ஏ.புரம் கிளையில் வாடிக்கையாளருக்கு, லாக்கர் திறக்க ஹிந்தியில் மட்டுமே படிவம் கொடுத்துள்ளனர்.
புதிதாக வந்துள்ள படிவங்கள் அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே உள்ளதென கூறுகிறார்கள். ஆட்சி மொழி சட்டத்தை மீறுகிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை யாரேனும் ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் திணித்தால், பாஜக கட்டாயம் எதிர்க்கும். அதில் சமரசமே கிடையாது எனக் கூறியுள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: TNSTC Employees salary: போக்குவரத்துத்துறைப் பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை... அரசின் முடிவு என்ன?