தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஆறாம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக பணியாற்றியதாக பண்ருட்டி எம்.எல்.ஏவும், மகளிரணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம், பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெருமாள், அண்ணா கிராமம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மார்ட்டின் லூயிஸ் (எ) பாபு, நெல்லிக்குப்பம் நகர கழக செயலாளர் சௌந்தர், வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராம்குமார் ஆகியோர் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட இந்தத் தேர்தலிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் ஏற்கனவே கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் சூழலில் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.