அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் புடைசூழ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்தோடு கட்சிக் கொடியை எற்றிவைத்தும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார், அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திய லிங்கம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் மற்றும் 300 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 1972ஆம் ஆண்டு திமுக விடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக எனவும், அந்த இயக்கமானது மக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக 47 ஆண்டுகளை கடந்து 48ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியில் வருவது சட்டரீதியான விவகாரம். அதில் நாங்கள் தலையிட இயலாது. மேலும், அவரையும், அவரது குடும்பத்தாரையும் ஒருபோதும் ஏற்பதில்லை என்ற கட்சியின் நிலைபாட்டில் இருந்து யாரும் மாறப்போவது இல்லை. சசிகலா இனி வரும் காலங்களிலும் கட்சியில் இணைவது என்பது சாத்தியமில்லை என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? - கி. வீரமணி பதில்